"நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் கூடினார்கள்".. "திராவிடத்தை காப்பாற்ற நீ எதற்கு?".. விஜய் மீது சீமான் மீண்டும் ஆவேசம்..
புதிதாக கட்சி தொடங்கி, முதல் மாநில மாநாட்டை நடத்தியுள்ள நடிகர் விஜய் மீது சீமான் கடும் விமர்சனங்களை ஆவேசமாக முன் வைத்து வருகிறார். ஆனால், சீமானின் விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை என தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு முன்பு எனது அன்புத்தம்பி விஜய் என ஆசை ஆசையாய் பேசிய சீமான், இப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், அவரது கொள்கை கோட்பாடுகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
75 ஆண்டுகளாக தமிழகத்தில் மாறி மாறி ஆட்சியில் இருக்கும் திராவிடம் நல்ல உறுதியான வாரிசுடன் இருப்பதால், திராவிடத்தை வளர்க்க விஜய் எதற்கு எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை நயன்தாரா கடை திறந்ததற்கு கூட 4 லட்சம் பேர் கூடினார்கள் என்றும் சினிமா நடிகனைப் பார்க்க வரும் கூட்டமும் கொள்கைக்காரர்களின் கூட்டமும் ஒன்றா? எனவும் சீமான் சீறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் சீமான் விமர்சிக்கத்தவறவில்லை.
இந்நிலையில், த.வெ.க மாநாட்டில், அக்கட்சியின் கொள்கைகளை விளக்கிய பேராசிரியர் சம்பத்குமார், சீமானின் விமர்சனம் குறித்து தனது முகநூலில் பதில் அளித்துள்ளார்.
அதில், விஜய்யை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் அவரது விமர்சனங்களை நாங்கள் மூளைக்குள் கொண்டுபோகவில்லை எனக்கூறியுள்ளார்.
மாநாட்டிற்கு முன்பு சீமான் பேசியதற்கும் மாநாட்டின் வெற்றிக்கு பின்பு சீமான் பேசியதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது எனவும், யாரை விமர்சனம் செய்ய வேண்டும் யாரை கடந்து போக வேண்டும் என்பதை விஜய் தங்களுக்கு உணர்த்தி உள்ளார் என்றும் தனது அறிக்கையில் சம்பத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரு சித்தாந்தங்களுக்கு இடையே சிக்கிக்கொள்ளாமல், இரண்டையும் கருத்தியலாக மட்டுமே கருதுவதாக விஜய் கூறியுள்ளதாகவும், ஆனால், அதை சீமான் புரிந்துகொள்ளாமல் விமர்சித்துவருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தனது வாக்குவங்கியை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்திலேயே சீமான் விஜய்யை கடுமையாக விமர்சிப்பதாகவும், தான் சொல்லித்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது திட்டங்களை நிறைவேற்றியதாக பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியுள்ளது பச்சைப் பொய் என்கிறார் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்.
ஒரு கட்சியின் கொள்கையை, செயல்பாட்டை மாற்றுக் கட்சியினர் விமர்சிப்பது வழக்கம். ஆனால், கூமுட்டை, லாரியில் அடிபட்டு செத்துப்போவாய் போன்ற சீமானின் கருத்துகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
Comments